×

திருவண்ணாமலையில் கடந்த 2 நாட்களில் 40 லட்சம் பக்தர்கள் மகாதீப தரிசனம் முடித்து பத்திரமாக ஊர் திரும்பினர்

*ஆந்திராவில் இருந்து ஒரே நாளில் 7 ஆயிரம் வாகனங்கள்

*பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு குவியும் பாராட்டு

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நடந்து முடிந்த தீபத்திருவிழாவை கடந்த 2 நாட்களில் மட்டும் 40 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து பாதுகாப்பாக ஊர் திரும்பியுள்ளனர். ஆந்திராவில் இருந்து மட்டும் ஒரே நாளில் 7 ஆயிரம் வாகனங்களில் பக்தர்கள் வந்துள்ளனர். முறையாக திட்டமிடப்பட்டு மேற்கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, இதுவரை எப்போதும் இல்லாமல் இந்த ஆண்டு வெகுவிமரிசையாக நடந்து முடிந்தது. அதையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகள் முறையாக திட்டமிடப்பட்டு கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தன. தீபத்திருவிழாவை தரிசிக்க வரும் பக்தர்களுக்கான போக்குவரத்து வசதி, குடிநீர், கழிப்பறை, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக நிறைவேற்ற விரிவாக திட்டமிடப்பட்டன. இப்பணிகளை ஒருங்கிணைக்க, மாவட்ட அளவிலான அதிகாரிகளை கொண்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது.

மேலும், தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டும், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் முறையாக செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின உத்தரவிட்டிருந்தார்.
அதையொட்டி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தீபத்திருவிழா கொடியேற்றம் நடந்த நாளில் இருந்து 10 நாட்களும் திருவண்ணாமலையில் தங்கியிருந்து தீபத்திருவிழா பணிகளை ஒருங்கிணைத்தார். அதோடு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர், நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றினர்.

மேலும், தமிழ்நாடு டிஜிபி சங்கர்ஜிவால், கூடுதல் டிஜிபி(சட்டம் ஒழுங்கு) அருண், வடக்கு மண்டல ஐஜி கண்ணன், உள்துறை செயலாளர் அமுதா, அறநிலையத்துறை செயலாளர் மணிவாசன், ஆணையாளர் முரளிதரன், போக்குவரத்துத்துறை செயலாளர் பணிந்திரரெட்டி, கலெக்டர் பா.முருகேஷ், டிஐஜி முத்துசாமி, எஸ்பி கார்த்திகேயன், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர் என உயர் அதிகாரிகள் நேரடியாக இப்பணிகளை மேற்பார்வையிட்டனர்.

இதுவரை எப்போதும் இல்லாத அளவில், 14 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு, போக்குவரத்து சிக்கல் ஏற்படாமல் தடுக்க பிரதான சாலைகளில் 500க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீஸ் கண்காணிப்பு, மீட்பு வாகனங்கள், 24 தீயணைப்பு வாகனங்கள், 36 இடங்களில் மருத்துவ முகாம்கள், கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள், பணிகளை ஒருங்கிணைக்க வசதியாக அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் வாக்கிடாக்கி வசதி, 623 சிசிடிவி கேமரா கண்காணிப்பு என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும், தீபத்திருவிழாவை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடும் பணியில் காவல்துறையும், சாஸ்திரா பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்டது. அதற்காக, தனிநபர் எண்ணிக்கையை கணக்கிடக்கூடிய கேமரா பொருத்தப்பட்ட கருவியின் உதவியுடன் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் இருந்து மட்டும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 ஆயிரம் வாகனங்கள் வந்தன. ஆனாலும், ஒரு சிறு சாலை விபத்தும் இல்லாமல், தீபதரிசனம் முடிந்து பக்தர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அதற்கு, பொதுமக்கள் தரப்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.இந்த ஆண்டு எதிர்பாராத வகையில், தீபம் ஏற்றிய பிறகும், வெளியூர்களில் இருந்து வாகனங்கள் திருவண்ணாமலை நோக்கி வந்ததால், வேலூர் சாலை, சென்னை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனாலும், இந்த சிக்கலை மிக துரிதமாக கையாண்டு, மீட்பு வாகனங்களின் உதவியுடன் போலீசார் சரி செய்து, போக்குவரத்து தடையின்றி செல்ல ஏற்பாடு செய்தனர்.

மேலும், கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போவதை தவிர்க்க, 65 ஆயிரம் குழந்தைகளின் கைகளில் பெற்றோரின் செல்போன் எண் முகவரியுடன் கூடிய ரிஸ்ட் பேண்ட் கட்டப்பட்டன. அதனால், இந்த ஆண்டு குழந்தை காணவில்லை என ஒரு புகாரும் பதிவாகவில்லை. அதோடு, திருட்டு, செயின் பறிப்பு போன்ற குற்றங்களும் குறிப்பிடும்படியாக நடைபெறவில்லை. ஒரு பெண் பக்தரிடம் 4 சவரன் செயின் அபகரித்ததாகவும், 32 பேரின் செல்போன் காணவில்லை என்றும் புகார் பதிவாகியுள்ளது.

மேலும், மலை மீது ஆண்டுதோறும் எதிர்பாராமல் தீ விபத்து ஏற்படுவது உண்டு. ஆனால், இந்த ஆண்டு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை பணிகளால், மலையில் தீ விபத்து ஏற்படுவது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது. அதேபோல், 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து இலவசமாக நகருக்குள் வர வசதியாக 250 மினி பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும், 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. எனவே, பக்தர்களுக்கு இவை பெரிதும் உதவியாக அமைந்தது.

The post திருவண்ணாமலையில் கடந்த 2 நாட்களில் 40 லட்சம் பக்தர்கள் மகாதீப தரிசனம் முடித்து பத்திரமாக ஊர் திரும்பினர் appeared first on Dinakaran.

Tags : Mahadeep Darshan ,Tiruvannamalai ,Andhra ,Mahadeep ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் நீரின்றி...